×

போலீஸ் பாதுகாப்புக்காக பொய் புகார் இந்து முன்னணி பிரமுகர் கைது

கோவை: போலீஸ் பாதுகாப்புக்காக கோவையில் மீன் வியாபாரி மீது போலீசில் பொய் புகார் அளித்த இந்து முன்னணி பிரமுகரை போலீசார் கைது செய்தனர். கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் சூர்யபிரசாத் (28), ஆட்டோ டிரைவர். இவர், செல்வபுரம் நகர இந்து முன்னணி தலைவராக உள்ளார். செல்வபுரம் வடக்கு அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் அசாருதீன். இவர் மீன் கடை வைத்துள்ளார். இவர் மீது கடந்த மாதம் 30ம் தேதி சூர்யபிரசாத் செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார். அதில், அசாருதீன் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வைத்துள்ளதாகவும், அவரால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அசாருதீன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார்.

இதைத்தொடர்ந்து போலீசார் அசாருதீனின் செல்போனை கைப்பற்றி, சைபர் கிரைம் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி சோதனை செய்தனர். ஆனால் சூர்யபிரசாத் கூறியதுபோன்று அசாருதீனின் போனில் புகைப்படம் எதுவும் சேமிக்கப்படவில்லை, அழிக்கப்படவும் இல்லை என்பதும், சூர்யபிரசாத் பொய் புகார் அளித்ததும் தெரியவந்தது. செல்வபுரம் போலீசில் சூர்யபிரசாத் தனக்கு தனி பாதுகாப்பு அதிகாரியை (பிஎஸ்ஓ) நியமிக்க வேண்டும் என கேட்டுள்ளார். ஆனால் அதற்கு போலீசார் மறுப்பு தெரிவித்தனர். எனவே இப்படியொரு பொய் புகாரை சூர்யபிரசாத் அளித்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் பொய் புகார் அளித்த சூரியபிரசாத் மீது வழக்குப்பதிந்து, அவரை நேற்று கைது செய்தனர். சில மாதங்களுக்கு முன்பு கோவை ரயில் நிலைய ஆட்டோ ஸ்டாண்டில் நேரப் பிரச்னையில் ஆட்டோ டிரைவர் ஒருவரை தாக்கியதாக சூர்யபிரசாத்தை ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post போலீஸ் பாதுகாப்புக்காக பொய் புகார் இந்து முன்னணி பிரமுகர் கைது appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Suryaprasad ,Selvapuram, Coimbatore ,Selvapuram City ,Hindu Front ,
× RELATED கோவையில் இளைஞர் படம் எடுத்ததாக கூறி...